×

கொரோனாவால் கடும் நிதி நெருக்கடி மாநில அரசுகளின் கடன் சுமை ரூ.8.25 லட்சம் கோடியாக உயரும்: பிரிக் நாடுகளிலேயே இந்தியாவின் நிலைதான் படுமோசம்

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க, மாநில அரசுகள் அதிக கடன் வாங்க வேண்டியிருக்கும். இதனால், கடன் சுமை ரூ.8.25 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கியது ஒரு புறம் இருக்க, மத்திய, மாநில அரசுகளுக்கும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரி வருவாய் குறைந்து விட்டது. கலால் வரியை உயர்த்தியும் விற்பனை இல்லாததால் கஜானா நிரம்பவில்லை.

இந்தியாவில் மாநிலங்களின் வரி வருவாயை பொறுத்தவரை, 43 சதவீதம் மத்திய அரசு பங்களிப்பாகவும், 57 சதவீதம் மாநிலங்களின் வரி மற்றும் வரிசாரா வருவாயாக உள்ளது. ஊரடங்கால் கடந்த ஏப்ரலில் மட்டும் 21 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.97,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மாநில அரசுகளின் கோபம், மத்திய அரசு மீது திரும்பியது. ‘வரி பங்கீட்டை வழங்குவதில் தாமதப்படுத்துகிறது. கொரோனா நெருக்கடியை கையாள நிதியில்லை. இந்த நேரத்தில் மத்திய அரசு கைவிரித்து விட்டது,’ என குற்றம் சாட்டின. பின்னர், மத்திய அரசு வரி பங்கீடாக இழப்பீட்டை வழங்கியது.

இருப்பினும், மாநிலங்களின் நிதி நிலை மோசமாகவே உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வில், ‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் செலவுகள் அதிகரிப்பால் மாநிலங்களின் கடன் சுமை நடப்பு நிதியாண்டில் ரூ.8.25 லட்சம் கோடியாக உயரும்,’ என தெரிவித்துள்ளது. முன்னதாக இது ₹6.09 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டிருந்தது. இந்தியாவில் 20 மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கடந்த நிதியாண்டிலேயே மாநிலங்களின் வருவாய், மத்திய அரசு பங்கீடு ஆகியவை மறு மதிப்பீட்டின்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை எனவும் இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார சரிவால், நடப்பு ஆண்டில் வரி வருவாய் மேலும் பாதிக்கப்படும். பெட்ரோல், டீசல் மீது கலால் வரியை உயர்த்தியும், வாகன இயக்கம் முடங்கியதால் வருவாயை அதிகரிக்க இது கைகொடுக்கவில்லை என புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க, மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான அளவை மத்திய  அரசு சமீபத்தில் உயர்த்தியது. இது ஒன்றே மாநிலங்களுக்கு ஆறுதலாக உள்ளது. எனினும், ஒரு புறம் வருவாய் சரிந்து வரும் நிலையில், செலவினங்களை சமாளிக்க கூடுதல் கடன் வாங்குவது ஆபத்தானது. இது மாநிலங்களின் நிலையை மேலும் மோசமாக்கிவிடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags : crisis ,countries ,India ,BRIC , Corona, severe financial crisis, state government, debt burden rises to Rs 8.25 lakh crore
× RELATED பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் புகழ் உயரவில்லை : ஆய்வில் தகவல்